செய்திகள்
விக்கிரமராஜா

கோவில்பட்டியில் நாளை ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி

Published On 2019-12-16 13:38 GMT   |   Update On 2019-12-16 13:38 GMT
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கோவில்பட்டியில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள்  மற்றும் வியாபாரிகளின் அமைப்பினர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். 

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரி நாளை (17-ந்தேதி) மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்தும், மே 5-ம் தேதி நெல்லை தச்சநல்லூரில் வணிகர்களின் சமூக நீதி எழுச்சி மாநாடு நடப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திரளான வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்திலும், எழுச்சி மாநாட்டிலும் கலந்து கொள்வதாக தீர்மானிக் கப்பட்டது. பின்னர் விக்கிரமராஜா  கூறியதாவது:- 

 தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். இதனை விட்டுவிட்டு வியாபாரிகளிடம் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதை தடுக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் 24 மணி நேரமும் நடப்பதால் சிறு பெரு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட காரணம் சேமிப்பு இல்லாத நிலைதான் இப்பிரச்சனையை மத்திய மாநில அரசுகள் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு இதுபோன்ற தட்டுப்பாடு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கோவில்பட்டியில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும். 

 இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக சங்க செயலர் மதுரம் செல்வராஜ் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகி யாபேஷ், தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, சாத்தை சங்க பொருளாளர் பாபுசுல்தான், துணைத் தலைவர் ஜோதிமணி, நகர நகை வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், அப்புகண்ணன், பிரபு, பாலசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News