செய்திகள்
நமது அம்மா

கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சி நடத்துவதே சந்தேகம்- அதிமுக நாளேடு தாக்கு

Published On 2019-12-12 10:01 GMT   |   Update On 2019-12-12 10:01 GMT
உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சி நடத்துவதே சந்தேகம் என்பதை உணர்த்துகிறது என்று அதிமுக நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

அரசியல் கட்சி தொடங்காத நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை. இதனால் கிடைக்கக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப் போகிறது. 2021 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் லட்சியம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தாக்கி அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா” விமர்சனம் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“கிராமசபை நடத்துகிறேன் என்று ஏக பில்டப்போடு கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் யதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனாக, முதல் காட்சியில் ஆசைப்பட்டு, மூன்றாவது காட்சியில் கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதலமைச்சர் இருக்கையை கணக்கு போட்டுவிட்டார்.

ஒரே ஒரு இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தலோடு ஆளை விட்டால் போதும் என்று உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து விட்டு பின்னங்கால் பிடரியில்பட கமல்ஹாசன் ஓடுகிறார் என்றால், அது அடுத்தவர் மீது குற்றங்களை அடுக்கினால் அதிகார இருக்கை தனக்காகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம்.

கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகிறது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News