செய்திகள்
பொன்னையன்

நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடு புகுந்து திருடியவர் கைது

Published On 2019-12-09 14:05 GMT   |   Update On 2019-12-09 14:05 GMT
நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடு புகுந்து நகை திருடியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 15½ பவுன் நகைகளை மீட்டனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கொங்காளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி புகுந்த மர்ம ஆசாமி பீரோவில் இருந்த 13½ பவுன் நகையை திருடி சென்று விட்டார். இதேபோல் கடந்த மாதம் 11-ந் தேதி மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ்சில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் ஜெயப்பிரதா பர்சில் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்து 500 திருட்டு போனது.

ராசிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஆர்.வி. கார்டன் பகுதியில் சசிகுமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி கரட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள பழனி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 4¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து நகை திருடனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி தலைமையில் தனிப்படை போலீசார் பஸ்நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் நாமகிரிப்பேட்டை அண்ணா காலனியை சேர்ந்த பொன்னையன் (வயது 39) என்பதும் பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து நகைகளை திருடி இருப்பதும், காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன 15½ பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரத்து 500-ஐ மீட்டனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.
Tags:    

Similar News