செய்திகள்
சாலை மறியல்

அரியூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

Published On 2019-12-04 10:42 GMT   |   Update On 2019-12-04 10:42 GMT
அரியூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அரியூர் காலணியில் கடந்த 2 வருடங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதை தீர்க்ககோரி அப்பகுதி மக்கள் கடந்த மாதம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மீண்டும் தண்ணீர் வரவில்லை, வந்தாலும் கலங்கிய தண்ணீராக வருவதாகவும் கூறி இன்று காலை 10 மணியளவில் அரியூர் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம்-புதுவை மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News