செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரேமலதா

Published On 2019-11-24 04:52 GMT   |   Update On 2019-11-24 04:52 GMT
மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை:

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் பால் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது அவற்றில் நச்சுத்தன்மை உள்ளது என்று மத்திய அரசு கூறி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மாநில அமைச்சர், அரசு விநியோகிக்கும் பாலில் கலப்படம் இல்லை. தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும் என கூறி உள்ளார். எது எப்படியோ மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மகாராஷ்டிராவில் இரவோடு இரவாக அவசர கதியாக ஆட்சி அமைத்துள்ளார்கள். அங்கு மிகப்பெரிய குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு அவசர காலகட்டத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகாரப்பூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதன் பின்னர் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எங்கு போட்டியிடுவது? என்பதை முடிவு செய்யலாம். எங்கள் கட்சியில் நாங்கள் குழு அமைத்துள்ளோம். அதன் மூலம் பேசி முடிவு எடுக்கப்படும்.


மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பது தி.மு.க. ஆட்சியிலேயே இருந்துள்ளது. ஆகையால் தற்போது அரசு அறிவித்ததில் தவறு இல்லை.

அதிசயம், அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று. அவர்கள் மிகச்சரியான நேரத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News