செய்திகள்
கோப்பு படம்

ஆரல்வாய்மொழி அருகே சாலையில் கிடந்த மலைப்பாம்பை பாதுகாத்த வாலிபர்கள்

Published On 2019-11-07 12:23 GMT   |   Update On 2019-11-07 12:23 GMT
ஆரல்வாய்மொழி அருகே சாலையில் கிடந்த மலைப்பாம்பை வாலிபர்கள் பாதுகாப்புடன் வனத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைத்தனர்.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி மலைகள் சூழ்ந்த வனப்பகுதியாக உள்ளதால் இங்கு வசிக்கும் காட்டுபன்றி உள்பட விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடும்.

அதே போல மலைப்பாம்பு உள்பட வி‌ஷ ஜந்துகளும் இந்த பகுதிக்கு வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு ஆரல்வாய்மொழி குருசடி தேவசகாயம் மவுண்டு செல்லும் வழியில் கோட்டைக்கரை பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 4 வழிச்சாலையில் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்தது.

இதை அந்த வழியாகச் சென்ற நாகக்குமார், ஐசக் ஆகியோர் பார்த்தனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி மலைப்பாம்பு உயிரிழக்க வாய்ப்பு இருப்பதால் அந்த மலைப்பாம்பை அவர்கள் காப்பாற்ற முடிவு செய்தனர்.

முதலில் நகர முடியாமல் சாலையில் கிடந்த அந்த மலைப்பாம்பு சிறிது நேரத்தில் மெதுவாக ஊர்ந்துச் செல்லத் தொடங்கியதால் அந்த வாலிபர்கள் உடனடியாக வனத்துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கை செய்து மலைபாம்பு மீது வாகனங்கள் மோதாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதற்குள் அந்த மலைபாம்பு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றிருந்தது. அந்த வாலிபர்களும் மலைப்பாம்புக்கு பாதுகாப்பாக அருகிலேயே நடந்து சென்றனர்.

இந்த நிலையில் தீயணைப்பு வீரர் சக்திவேல் தலைமையில் அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் சாலையில் கிடந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிறகு அந்த மலைப்பாம்பு ஆரல்வாய்மொழி வனத்துறை சோதனைச்சாவடியில் ஒப்படைக்கப்பட்டது.

வன ஊழியர்கள் பொய்கை அணைப்பகுதியில் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக விட்டனர். மலைப்பாம்பை பாதுகாத்தவர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Tags:    

Similar News