செய்திகள்
கோப்பு படம்

ஆண்டிப்பட்டி அருகே கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு

Published On 2019-11-06 17:03 GMT   |   Update On 2019-11-06 17:03 GMT
ஆண்டிப்பட்டி அருகே பருவ நிலை மாற்றத்தால் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் சாரல் மழை பெய்தது. குறிப்பாக ஆண்டிப்பட்டி, வரு‌ஷநாடு, அரசரடி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

அதன் பிறகு மழை முற்றிலும் நின்றது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக கிராமங்களில் பனி மூட்டம் அதிகரித்துள்ளது.

கடமலைக்குண்டு, வரு‌ஷ நாடு, அய்யனார்புரம், கண்டமனூர், மயிலாடும் பாறை உள்ளிட்ட கிராமங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அடர்த்தியாக பரவி நீடித்து வருகிறது.

எதிரில் நடந்து வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர். மலைச்சாலைகளிலும், குடியிருப்பு பகுதியிலும் காணப்படும் இந்த பனி மூட்டத்தை பொதுமக்கள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News