செய்திகள்
டாஸ்மாக் பணம் கொள்ளை

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.4 லட்சம் வழிப்பறி

Published On 2019-11-02 07:48 GMT   |   Update On 2019-11-02 07:48 GMT
டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பெரியபட்டினம் அருகே உள்ள கரிச்சான்குண்டு பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக தெற்குகாடவூரைச் சேர்ந்த கோபிநாத் (வயது43) பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு விற்பனை நேரம் முடிந்ததும் கோபிநாத் கடையை மூடினார். பின்னர் விற்பனை தொகை ரூ.4 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

பெரியபட்டினம்-ரெகுநாதபுரம் இடையே அவர் சென்றபோது 5 பேர் கும்பல் வழி மறித்தது. அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கோபி நாத்தை தாக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அதனை பயன்படுத்தி கோபிநாத் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணப்பையை வழிப்பறி கும்பல் எடுத்துச் சென்று விட்டது.

இதுகுறித்து திருப்புல்லாணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

படுகாயத்துடன் கிடந்த கோபிநாத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துணிகர செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் குறித்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோபிநாத் பணத்துடன் வருவதை நோட்டமிட்டு திட்டம் தீட்டி வழிப்பறி சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Tags:    

Similar News