செய்திகள்
அமைச்சர் கந்தசாமி

15 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை- அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

Published On 2019-10-29 12:13 GMT   |   Update On 2019-10-29 12:13 GMT
புதுவையில் 15 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

பாகூர்:

ஏம்பலத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். இதனை அரசு துறை செயலர்கள் புறக்கணித்தது வருத்தம் தருகிறது.

உயரதிகாரிகள் மக்கள் நலதிட்டங்களை செயல் படுத்த முட்டுக்கட்டையாக உள்ளனர். அதனையும் மீறி எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும், தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கியும் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. உயரதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். வரும்காலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

இலவசமாக வெள்ளை அரிசி வழங்க வேண்டும் என வைத்திலிங்கம் முதல்-அமைச்சராக இருந்தபோது திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்தது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்த கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார். அரிசிக்கு பதில் பணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். மக்கள் அரிசி வழங்குவதையே விரும்புகின்றனர், கோரிக்கை வைக்கின்றனர். கவர்னருக்கு சந்தேகம் இருந்தால் குரல் வாக்கெடுப்பு மூலம் இதை அறிந்து திட்டத்திற்கு ஒப்புதல் தரலாம்.

பல இடங்களில் கவர்னர் ஆய்வுக்கு சென்றபோது அரிசி வழங்கும்படி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கவர்னர் இந்த கோரிக்கையை நிராகரித்து பணமாக வழங்க வலியுறுத்தி வருகிறார்.

வைத்திலிங்கம் எம்.பி. மத்திய அரசிடம் பேசி இலவசமாக அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பார். எனது தொகுதியிலும் அதிகாரிகள் செயல்படாததால் குறைகள் நிறைய உள்ளது. இன்னும் காங்கிரஸ் ஆட்சிக்கு 18 மாதம்தான் உள்ளது. அதற்குள் அனைத்து திட்டங்களையும் போராடியாவது நிறைவேற்றுவோம். 25 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்‌ஷன் வழங்க திட்டமிட்டோம்.

இதில் 10 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். எஞ்சிய 15 ஆயிரம் பேருக்கு முதியோர்பென்‌ஷன் வழங்குவோம். மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News