செய்திகள்
ஊட்டி மலை ரெயில்

நீலகிரியில் தொடர்மழை - ஊட்டி மலை ரெயில் 3 நாட்களுக்கு ரத்து

Published On 2019-10-18 10:06 GMT   |   Update On 2019-10-18 10:06 GMT
நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் 3 நாட்கள் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம்:

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது.

நேற்றுமுன்தினம் (16-ந்தேதி) இரவு பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி- ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே 2 இடங்களில் ரெயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 200 பயணிகளுடன் காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரெயில் காலை 8.30 மணிக்கு அடர்லி ரெயில்நிலையம் 6-ம் எண் குகை அருகே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து குன்னூர் மலைரெயில் இருப்புப் பாதை பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் 15-க்கும் மேற்ட்ட ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில் பாதையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். காலை10.30 மணிக்கு சீரமைக்கும்பணி முழுவதும் முடிவடைந்ததும் அங்கிருந்து புறப்பட்ட மலை ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக குன்னூரைச் சென்றடைந்தது. இதன் காரணமாக ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து நேற்று (17-ந்தேதி) ரத்து செய்யப்பட்டது.

மேலும் தொடர்மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் இன்று (18-ந்தேதி) முதல் வருகிற 20-ந்தேதி வரை 3 நாட்கள் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags:    

Similar News