தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் மீட்பு
பதிவு: அக்டோபர் 15, 2019 20:49
கரை ஒதுங்கிய கல்லூரி மாணவன் குருமூர்த்தியின் உடலை படத்தில் காணலாம்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள சப்படி பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது21). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கோபசந்திரம் தென் பெண்ணை ஆற்றில் குளித்தார். அப்போது ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் ஆற்றில் குருமூர்த்தி அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்த சக நண்பர்கள் அலறினர்.
இது குறித்து சூளகிரி போலீசாருக்கும், ஓசூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குருமூர்த்தியின் உடலை தேடி பார்த்தனர். ஆனால் குருமூர்த்தியின் உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று காலை பார்த்தகோட்டா அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குருமூர்த்தியின் உடல் அழுகிய நிலையில் ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.