செய்திகள்
நடிகை குஷ்பு

மோடி குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் - நடிகை குஷ்பு

Published On 2019-10-14 10:20 GMT   |   Update On 2019-10-14 10:20 GMT
தமிழகம் வந்த பிரதமர் மோடி நட்சத்திர விடுதி கடற்கரையில் குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை:

நாங்குநேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற மகிளா காங்கிரஸின் தேசிய செயலாளர் குஷ்பு தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

‘தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக தேச துரோகி என்று பட்டம் கொடுப்பதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது.

அப்பேற்பட்ட ஆட்சிக்கு ஆதரவாகத்தான் அ.தி.மு.க ஆட்சி செயல்படுகிறது. தொழில்ரீதியான வளர்ச்சிகளும் இல்லை. அ.தி.மு.க. அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. மாறாக தமிழகத்தின் கடன் சுமைதான் அதிகரிக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போதிலும் சரி, தற்போதும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

நாங்குநேரியில் அதிகார பலம், பணப்பலத்தை வைத்து அ.தி.மு.க. வெற்றி பெற நினைக்கிறது. ஆனால் அது நடக்காது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கோட்டை. இங்கு காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு மாறியுள்ளனர். அவர்கள் தெளிவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வின் பணப்பலம் இங்கு வெற்றி பெறாது.

பிரதமர் மோடியின் எல்லா செயல்பாடுகளையும், நாம் அரசியலாக்கி விமர்சிக்க கூடாது. தமிழனின் பெருமையை, கலாசாரத்தை பிரதமர் மதித்து, வேட்டி அணியும்போது, அது சர்வதேச அளவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.



ஆனாலும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதி கடற்கரையில் குப்பை அள்ளியது, விளம்பரத்திற்காகத்தான் என தோன்றுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது.

அதற்காக, போட்டோ எடுத்து, தன்னை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, தூய்மை பணியில் பிரதமர் ஈடுபடுவது நன்றாக இருக்காது’.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News