செய்திகள்
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற கவர்னர்

சீன அதிபரை சந்திக்க சென்னை வந்தார் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Published On 2019-10-11 06:06 GMT   |   Update On 2019-10-11 06:06 GMT
சீன அதிபரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை:

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் முறைசாரா உச்சிமாநாடு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்புக்காக டெல்லியில் இருந்து இன்று காலையில் தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, 11 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மோடியை வரவேற்றனர். தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விமான நிலைய வளாகத்தில் செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் ஆடிப்பாடி மோடியை வரவேற்றனர்.



இந்த வரவேற்பைத் தொடர்ந்து விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்திற்கு புறப்பட்டுச் சென்றார் மோடி. அங்கு தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலையில் மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்து பேச உள்ளார்.

சீன அதிபர், மோடி சந்திப்பு நடைபெறுவதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News