செய்திகள்
ஜான்குமார்

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தல்- காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டி

Published On 2019-09-28 09:23 GMT   |   Update On 2019-09-28 09:23 GMT
புதுவையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஓரணியாகவும், என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிடுகின்றன. இதில் காங்கிரசும் என்.ஆர். காங்கிரசும் நேரடியாக களம் இறங்குகின்றன.

காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்வதற்காக புதுவை காங்கிரசார் டெல்லியில் முகாமிட்டனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது ஆதரவாளர் ஜான்குமாருக்கும், மாநிலதலைவர் நமச்சிவாயம் தனது ஆதரவாளரான ஜெயக்குமாருக்கும் சீட் கேட்டனர். தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்குவதில் இருவருமே உறுதியாக இருந்தனர்.

பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முதல்-அமைச்சரின் ஆதரவாளரான ஜான்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இதற்கிடையே எதிரணியாளர் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. தரப்பில் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் தனது தம்பியான செந்தில்குமாரை போட்டியிட முயற்சி எடுத்தார். என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான ராதாகிருஷ்ணன் தனது தம்பியை பா.ஜ.க.வில் போட்டியிட முயற்சித்தது என்.ஆர். காங்கிரசில் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இதற்கு என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஆரம்பத்தில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வந்த என்.ஆர். காங்கிரஸ் திடீரென களத்தில் குதித்தது. அ.தி.மு.க.வும் என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது.


இதனையடுத்து வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. நேருவை என்.ஆர். காங்கிரஸ் களம் இறக்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News