செய்திகள்
மழை

கள்ளக்குறிச்சி பகுதியில் கனமழை- 100 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

Published On 2019-09-26 10:50 GMT   |   Update On 2019-09-26 10:50 GMT
கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தியாகதுருகம் அருகே மகரூர் கிராமத்தில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

தொடர் மழையால் தியாகதுருகம் அருகே மகரூர் கிராமத்தில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. போதுமான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் அப்படியே தேங்கி உள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் மழை நீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்கிய தண்ணீர் மூலம் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றார்.

கல்வராயன்மலை பகுதியிலும் மழை நீடித்தது. இதனால் மலை பகுதியில் உள்ள பெரியார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கனமழையால் கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி ஆகும். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Tags:    

Similar News