செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

2 தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு சவால் இல்லை- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2019-09-25 05:34 GMT   |   Update On 2019-09-25 05:34 GMT
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவுக்கு சவாலாக இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:

தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சனை நிலுவையில் உள்ளன. இதுகுறித்து பேசுவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘பரம்பிகுளம்-ஆழியாறு நீர் பகிர்வு, பாண்டியாறு- புன்னம்புழா திட்டம், நெய்யாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கேரள முதலமைச்சருடன் பேசுவதற்காக செல்கிறேன். செண்பகவள்ளி நீர்வழிப்பாதை சீரமைப்பு பற்றியும் பேச உள்ளேன். தமிழகம் மற்றும் கேரள மாநில விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலன் பெறுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது’ என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதேபோல் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு செயல்பட வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு குழுவை அமைத்து அந்த குழுவின் அடிப்படையில் மாதாந்திர வாரியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது’ என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவுக்கு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், ‘அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் சவாலாக இல்லை. இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும், அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இது உறுதி.


மக்களவைத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததால் திமுக வெற்றி பெற்றது. அதன்பின்னர் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்துவிட்டது. அதன்பின்னர் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.
Tags:    

Similar News