செய்திகள்
சிறை

தவறுதலாக வங்கி கணக்கில் வந்த ரூ. 40 லட்சம் - சொத்து வாங்கிய கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை

Published On 2019-09-17 10:38 GMT   |   Update On 2019-09-17 10:38 GMT
தவறுதலாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ. 40 லட்சத்தை எடுத்து சொத்து வாங்கிய கணவன்-மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் ரோடு கார்ப்பரேசன் வங்கியில் இருந்து ஒருவருடைய வங்கிக்கணக்குக்கு ரூ.40 லட்சம் பணப்பரிமாற்றம் செய்த போது, தவறுதலாக திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்த குணசேகரன்(வயது 50) என்பவரின் வங்கிக்கணக்குக்கு சென்று விட்டது. 

இதுகுறித்து அறிந்த வங்கி அதிகாரிகள் குணசேகரனிடம் தொடர்பு கொண்டு ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்துமாறு கேட்டும், அவர் அந்த பணத்தை திரும்பிக்கொடுக்காமல் அந்த பணத்தில் சொத்துகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கார்ப்பரேசன் வங்கியின் உதவி பொது மேலாளர் நரசிம்மகினி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு இதுகுறித்து குணசேகரன் மற்றும் அவருடைய மனைவி ராதா(45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2 ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குணசேகரன், ராதா ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News