செய்திகள்
கைது

சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது

Published On 2019-09-16 09:44 GMT   |   Update On 2019-09-16 09:44 GMT
திருப்பூரில் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மண்ணரையில் ரேவதி சினிமா தியேட்டர் உள்ளது. இங்கு கடந்த 9- ந் தேதி அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தியேட்டர் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் பெட்ரோல் குண்டை தியேட்டரை நோக்கி வீசினார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஓட்டி வந்த வாலிபர் மீது பெட்ரோல் குண்டு சிதறி தீ பிடித்தது. தீ ப்பிடித்து எரிந்ததும் குண்டு எரிந்தவர் தீயை அணைத்தார். எனினும் அவரது உடல் கருகியது.

தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு விழுந்து எரிந்ததை பார்த்த ஊழியர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஊழியர்கள் நடமாடுவதை அறிந்த பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும் தியேட்டரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசுவதும் அது சிதறி முன்னால் அமர்ந்திருந்தவர் மீது பட்டு எரிவதும் பதிவாகியிருந்தது. இதனால் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு விழாமல் 20 அடிக்கு முன்னதாகவே விழுந்து எரிந்தது. பெட்ரோல் குண்டு சிதறி உடலில் தீ பற்றி எரிவதை அணைக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்கள் யார்? எதற்காக தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசியது பனியன் கம்பெனி தொழிலாளர்களான திருப்பூர் கோல்டன் நகர் முருகன் (23), கருமாரம் பாளையம் காசி (21) என்பது தெரிய வந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் சினிமா பார்க்க வந்தோம். தியேட்டர் ஊழியர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மிரட்டல் விடுப்பதற்காக பெட்ரோல் குண்டு வீசினோம் என கூறினார்கள்.கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News