செய்திகள்
பொன்.மாணிக்கவேல்

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு

Published On 2019-09-11 15:16 GMT   |   Update On 2019-09-11 15:16 GMT
நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.
நெல்லை:

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரித்து வருகிறார்.

எனினும், சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன்.மாணிக்கவேலுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி அவையில் குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்பொழுது, பொன்.மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இதனிடையே, நெல்லை கல்லிடைக்குறிச்சியில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News