செய்திகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்

ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம்

Published On 2019-09-11 08:56 GMT   |   Update On 2019-09-11 08:56 GMT
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம் நடைபெற்றது.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக கருதுகின்றனர்.

எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும் அங்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம் நடந்துள்ளது.

தென்சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான எஸ்.பவானி சங்கர் - வாசுகி பவானி சங்கர் ஆகியோரது மகன் சாம்பசிவராமன் (எ) சதீஷ். இவருக்கும் தீபிகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

சதீஷ்-தீபிகா திருமணத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்த பவானி சங்கர் முடிவு செய்து மணமக்களை அங்கு அழைத்து வந்தார். நினைவிடத்தில் திருமணம் நடத்த அதிகாரிகளும், போலீசாரும் சம்மதம் தெரிவித்தனர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திருமாங்கல்யத்தை வைத்து வணங்கி மணமக்களிடம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் பெற்றோருடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், பூங்குன்றம், காஞ்சி பன்னீர்செல்வம், ஜீவாதினன் உள்பட கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
Tags:    

Similar News