செய்திகள்
பண மோசடி

நெற்குன்றத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கோடி கணக்கில் மோசடி - பொது மக்கள் புகார்

Published On 2019-08-21 12:00 GMT   |   Update On 2019-08-21 12:00 GMT
நெற்குன்றத்தில் உள்ள நிறுவனம் ஒன்று பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி செய்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
போரூர்:

நெற்குன்றம் வி.ஜி.பி. அமுதா நகரில் எஸ்.எல். எஸ்.எஸ். எண்டர் பிரைசஸ் என்ற பெயரில் கடந்த 5 மாதமாக நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தை சுந்தரமூர்த்தி, ராஜசேகர், பாலமுருகன் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் தங்களிடம் பணம் கட்டினால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவோம் என்று விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி ஏராளமான பொது மக்கள் லட்சம் லட்சமாக பணத்தை டெபாசிட் செய்தனர். சொன்னபடி ஒருசிலருக்கு முதலில் பணம் இரட்டிப்பு செய்து கொடுத்தனர். அதன் பின்னர் தங்களது ஏமாற்று வேலையை தொடங்கினர்.

பணம் செலுத்தியவர்களுக்கு குறித்த நாட்களில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

அதில் முதலீடு செய்தவர்கள் அங்கு சென்று ஏமாந்தனர். நேற்று அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.

மேற்கு முகப்பேரை சேர்ந்த லட்சுமிநாராயணன் ரூ. 5 லட்சம், குரோம்பேட்டையை சேர்ந்த அசாரூதின் ரூ. 5 லட்சம், கொரட்டூர் வித்திய லட்சுமி ரூ. 19 லட்சம் ஆகியோர் இந்த இரட்டிப்பு பண மோசடியில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோல இன்னும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News