செய்திகள்
தக்காளி

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

Published On 2019-08-18 12:04 GMT   |   Update On 2019-08-18 12:04 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம்:

தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமமான அத்திகோம்பை, மார்க்கம்பட்டி, கீரனூர், அம்பிளிக்கை, விருப்பாச்சி மற்றும் மலை கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் சாகுபடி நிலங்களை குறைத்தனர்.

இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு உள்ளூரில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையானது.

தற்போது பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. மழை பெய்வதால் தக்காளிகளை இருப்பு வைக்க முடியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

இதனால் தற்போது வரத்து அதிகரித்து விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரையே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகின்றனர்.

லாபம் கிடைக்காத நிலையில் தற்போது பயிரிட்ட செலவுக்கு கூட பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையும், பல்லாரி ரூ.15 முதல் ரூ.20 வரையும் விற்பனையானது.

Tags:    

Similar News