செய்திகள்
அமித்ஷா

பயங்கரவாதம் ஒழிந்து காஷ்மீர் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் - அமித்ஷா

Published On 2019-08-11 07:15 GMT   |   Update On 2019-08-11 07:15 GMT
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயங்கரவாதம் ஒழிந்து, இனி வளர்ச்சி பாதைக்கு செல்லும் என நம்புவதாக உள்துறை மந்திரி அமித்ஷா குறிப்பிட்டார்.
சென்னை:

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

வெங்கையா நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன். இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

அமைச்சராகவோ, பா.ஜ.க. தலைவராகவோ இங்கு நான் வரவில்லை. மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கையா நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன்.

இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை. தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை, விரைவில் கற்றுக்கொண்டு பேசுவேன்.

வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியிலேயே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு பணியாற்றி இருக்கிறார். அவருடைய மாணவன் என்ற முறையிலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். தனது வாழ்நாளில் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் வெங்கையா நாயுடு. 

நெருக்கடி நிலை காலகட்டத்தில் சிறையில் இருந்தவர் வெங்கையா நாயுடு. பா.ஜ.க.வின் பல்வேறு பொறுப்புகளை கடந்து மாநிலங்களவை தலைவராகி இருக்கிறார். 

சட்டப்பிரிவு 370 முன்பே ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்பினேன். காஷ்மீர் மசோதாவை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம். 370 ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம். உள்துறை மந்திரியாக எனது மனதில் எந்த குழப்பமும் இல்லை. இனி காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழியும் என நம்புகிறேன். காஷ்மீர் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என தெரிவித்தார். 
Tags:    

Similar News