செய்திகள்
பலியான தலைமை குருக்கள் முரளி

திருவாரூர்: தேரில் இருந்து தவறி விழுந்து தலைமை குருக்கள் பலி

Published On 2019-08-03 05:29 GMT   |   Update On 2019-08-03 05:29 GMT
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. அப்போது தேரில் இருந்து தவறி விழுந்து தலைமை குருக்கள் பலியானார்.

திருவாரூர்:

ஆடிப்பூர திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பெரிய சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரினை கொண்ட கோவிலாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வருடாந்திர ஆடிப்பூர திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினசரி கமலாம்பாள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திர, பூத, யானை, ரி‌ஷப, கைலாச வாகனங்களில் கமலாம்பாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக மதியமே கமலாம்பாள் கோவிலில் இருந்து புறப்பட்டு பக்தர்களால் தூக்கி விடப்பட்டு தேரினில் அமர்த்தப்பட்டு காட்சி தந்து வந்தார். மாலை 6 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். “ஆரூரா தியாகேசா” என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம்பிடித்தனர்.

தேர் இரவு நிலைக்கு வந்தவுடன் தீபாராதனை செய்வதற்காக கோவில் தலைமைக் குருக்கள் முரளி (வயது56) தேர் மீது ஏறினார். அப்போது நிலை தடுமாறி தலைக்குப்புற கிழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் குருக்கள் முரளியை மீட்டு திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு முரளி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக கோவில் கண்காணிப்பாளர் நந்தகுமார், திருவாரூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான குருக்கள் பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இக்கோவிலில் தலைமை குருக்களாக பணிபுரிந்து வந்தார். இளம் வயதில் இருந்து குருக்களாக பணி புரிந்துவந்தார். இவரது தந்தை சீதாராம குருக்கள் மறைவுக்கு பிறகு கோவில் தலைமை குருக்களாக இருந்து வந்தார். இவரது மகன் அரவிந்த், இவரது சகோதரர்கள் ரவி மற்றும் கணேஷ் ஆகியோரும் குருக்களாக உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தெப்பத் திருவிழாவின் போது தலைமைக் குருக்கள் முரளியின் மகன் அரவிந்த் தெப்பத்தில் இருந்து நிலைதடுமாறி கமலாலய குளத்தில் விழுந்தார். உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர் அரவிந்தனை காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News