செய்திகள்
மின்னல்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் படுகாயம்

Published On 2019-07-30 13:22 GMT   |   Update On 2019-07-30 13:22 GMT
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் மின்னல் தாக்கி 2 பெண்கள் காயமடைந்தனர்.

கடலூர்:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை மற்றும் இரவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ரோடுபொட்டவெளி கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர்கள் அஞ்சுதம் (வயது38), சாந்தி (40). இவர்கள் நேற்று தெற்குபள்ளிநீர் ஓடையில் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். மாலையில் வேலை முடிந்ததும் 2 பேரும் வீட்டிற்கு செல்வதற்காக சிந்தாமணிகுப்பம் பெருமாள் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அந்த சமயத்தில் மின்னல் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கடலூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருப்பா புலியூர், மஞ்சக்குப்பம், மேல் பட்டாபாக்கம், நடூவிரப்பட்டு, ரெட்டிச்சாவடி, தூக்கனாம்பாக்கம் உள்பட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.

நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வைடப்பாக்கத்தில் உள்ள ஒரு தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தென்னை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.

விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மயிலம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5.30 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது இரவு 7 மணி வரை நீடித்தது.

இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. திடீரென பெய்த மழையால் சாலையில் சென்ற பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.

சங்கராபுரம், ரிஷிவந்தியம், பகந்தை கூட்டுரோடு, மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது.

உளுந்தூர்பேட்டை, பாலி, எலவனாசூர் கோட்டை, ஆசனூர், காட்டு நெமிலி, பாண்டூர் அரசூர், மடப்பட்டு, திருவெண்ணைநல்லூர், பையாசோர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மழைவிட்டு விட்டு பெய்தது. மழையால் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவர்கள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.

மரக்காணம், அனுமந்தை, ஆலத்தூர், குனிமேடு போன்ற சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.

அதேபோல் உப்பாளம் பெய்த மழையினால் உப்பு உற்பத்தி அறுவடை நிறுத்தப்பட்டது. இதனால் உப்பு அறுவடை தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதேபோல் திண்டிவனம், பிரம்மதேசம் போன்ற பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News