செய்திகள்
விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்.

ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்தது- 9 பேர் படுகாயம்

Published On 2019-07-25 17:12 GMT   |   Update On 2019-07-25 17:12 GMT
பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாடாலூர்:

சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு ஆம்னி பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பஸ்சை திருச்சியை சேர்ந்த சங்கர் மகன் சிங்காரவேலு (வயது 28) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. பின்னர் சில வினாடிகளிலேயே பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான பஸ்சுக்குள் சிக்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பயணிகளான திருச்சி பாலக்கரையை சேர்ந்த பரணி(40), தஞ்சாவூரை சேர்ந்த பாலசந்திரன் மனைவி கீதா (54), மன்னார்குடியை சேர்ந்த இளமாறன்(34), சென்னை கே.கே.நகரை சேர்ந்த பழனிசாமி(56), திண்டுக்கலை சேர்ந்த சுப்ரமணியின் மனைவி செல்வி(30) மற்றும் ஆம்னி பஸ்சின் டிரைவர் சிங்காரவேலு உள்பட 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை பார்வையிட்டு, அதனை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்க கலக்கத்தினால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானாதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     
Tags:    

Similar News