செய்திகள்
மழை நிலவரம்

வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Published On 2019-07-25 07:55 GMT   |   Update On 2019-07-25 07:55 GMT
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வடமாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடமாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.



சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இதுவரையில் 81 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்பான மழை அளவான 114 மி.மீட்டரை விட 23 மி.மீட்டர் குறைவாக மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 8 செ.மீட்டர், காவேரிபாக்கம் 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News