செய்திகள்
கைது

ஆறுமுகநேரி அருகே பாத யாத்திரை பக்தரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2019-07-24 11:08 GMT   |   Update On 2019-07-24 11:08 GMT
ஆறுமுகநேரி அருகே அரிவாளை காட்டி மிரட்டி பாத யாத்திரை பக்தரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அவ்வழியாக செல்பவர்களை வழிமறித்து உதவி கேட்பது போல் பணம் கேட்டுள்ளனர். அவ்வாறு பணம் கொடுக்க மறுத்தால் கத்தியை காட்டி மிரட்டி பறித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முக்காணி காமராஜ்நகரை சேர்ந்த கனகராஜ் (வயது43) என்பவர் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளார். அவர் தெற்கு ஆத்தூர் பகுதியில் மதியம் வந்தபோது வாலிபர் ஒருவர் பீடி இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு கனகராஜ் இல்லை என கூறியதும் அருகில் வந்து பணம் கேட்டுள்ளார்.

கனகராஜ் பணம் கொடுக்க மறுக்கவே வாலிபர் அவரை அடித்து உதைத்து அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து உதவிக்கு வந்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து கனகராஜ் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் சற்று தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்த முத்துராஜ் மகன் மாரிமுத்து(22) என்பதும், கனகராஜை மிரட்டி பணம் பறிக்க முயன்றது அவர்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News