செய்திகள்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு

Published On 2019-07-23 09:49 GMT   |   Update On 2019-07-23 09:49 GMT
உள்ளூர் வரத்து குறைவு மற்றும் கேரளாவில் கன மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிந்துள்ளது.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கொண்டு வரப்படும். தற்போது வறட்சி மற்றும் மழை இல்லாததால் உள்ளூர் வரத்து குறைந்துள்ளது.

அதே சமயம் கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி 80 மற்றும் அதற்கு கூடுதலான லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். ஆனால் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக 50 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் செல்கிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு பெட்டி தக்காளி ரூ.550 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.300 ஆக குறைந்துள்ளது. பெங்களூர் தக்காளியே விற்பனைக்கு வருகிறது. உடுமலைபேட்டையில் இருந்து நாட்டு தக்காளி கொண்டு வரப்படுகிறது.

இதேபோல் வெங்காயமும் மைசூரில் இருந்தே வருகிறது. இதன் விலையும் ரூ.50 வரை விற்ற நிலையில் தற்போது ரூ.25-க்கு விற்கப்படுகிறது. சேனைக்கிழங்கு கரூரில் இருந்தும், மத்தல், இலவன் காய்கறிகள் பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்தும் அர்ச்சனா பூசணி மைசூரில் இருந்தும், உருளைக்கிழங்கு, கேரட் மேட்டுப்பாளையத்தில் இருந்தும், இஞ்சி கேரளாவில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

வரத்து குறைவாக இருக்கும் சமயத்தில் விலை அதிகரிக்கும். ஆனால் வெளியூருக்கு அனுப்பப்படும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளதால் விலையும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் கனமழை காரணமாக அங்குள்ள வியாபாரிகள் காய்கறிகள் வாங்கும் அளவை வெகுவாக குறைத்து விட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை, கத்தரி உள்பட பல்வேறு காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடிக்கும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News