செய்திகள்
அமைச்சர் எஸ்பி வேலுமணி

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

Published On 2019-07-17 09:44 GMT   |   Update On 2019-07-17 09:44 GMT
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கூறும்போது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் செயலாக்க மானியத்தை தமிழகத்துக்கு வழங்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் 5 ஆண்டு ஆகும்.

கடந்த 24.10.2016 அன்று உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பே தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 3 வருடத்துக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சிகளின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாத நிலை உள்ளது.

எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வருமா?

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- குறிப்பிட்ட காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கட்டமைப்பாக இருந்த உள்ளாட்சி அமைப்புகள் கட்டமைப்பு இல்லாமல் உள்ளதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. தேர்தல் நடைபெறாததால் உளளாட்சிக்கு நிதி வழங்க போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:- உள்ளாட்சி மன்ற தேர்தல் ஏற்கனவே 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் தள்ளிக்கொண்டே சென்றது. இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பணியான வார்டு மறுவரையறை பிரிக்கும் பணி நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வார்டு மறுவரையறை பிரித்து மிகப்பெரிய பணியை முடித்துள்ளோம்.


உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தலுக்கான அட்டவணையும் கொடுத்துள்ளனர். எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணையாக மத்திய அரசிடம் இருந்து பணம் ஒதுக்கப்படும். இப்போது நிதி வருவதில் காலதாமதம்ஆகி உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க நான் டெல்லி செல்லும் போதெல்லாம் மத்திய மந்திரிகளை சந்தித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய நிதியை வற்புறுத்தி வந்துள்ளேன்.

இதன் மூலம் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியில் 8,531 கோடியே 94 லட்சத்தை வாங்கி வந்துள்ளோம். நீதிமன்ற வழக்கு முழுமையாக முடியாத காரணத்தையும் நாங்கள் அங்கு தெரிவித்துள்ளோம். எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு தயாராகவே இருக்கிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.
Tags:    

Similar News