செய்திகள்
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையினால் குடைபிடித்து சென்ற பொதுமக்கள்.

கொடைக்கானலில் 2-வது நாளாக கொட்டி தீர்த்த கன மழை

Published On 2019-07-16 06:20 GMT   |   Update On 2019-07-16 06:20 GMT
கொடைக்கானலில் 2-வது நாளாக கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மற்றும் இதமான மழை பெய்து வந்தது.

கடந்த 2 நாட்களாக கொடைக்கானல், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் மலை கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி ஆகிய காய்கறி பயிர்களின் விளைச்சலுக்கு ஏற்றதாக அமைந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. தற்போதுபெய்து வரும் பலத்த மழையினால் நீரோடை பகுதிகளிலும் நீர்வரத்து பகுதிகளிலும் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் நீடித்து வந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மேல்மலை, கீழ்மலை கிராமப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News