முரண்பாடுகளின் தொகுப்பாக மத்திய பட்ஜெட் அமைந்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-
வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவும் நிலையில், விவசாயத்திற்கு சிறப்பு திட்டங்களோ நிதி உதவிகளோ இல்லாமல் வெறும் வார்த்தைகளில் விவசாயிகளைப் புகழ்ந்துவிட்டால் போதும் என அரசு நினைத்துவிட்டதாக தெரிகிறது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
மொத்தத்தில் புதிய இந்தியா என்ற கனவு வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லி, அதற்காக புதுப்புது பெயர்களில் திட்டங்களை மட்டும் அறிவித்துவிட்டால் புதிய இந்தியா பிறந்துவிடும் என்று இந்த அரசு நினைப்பது, வெறும் பகல் கனவாகவே இருந்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த பட்ஜெட் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.