செய்திகள்

திருவள்ளூர் பகுதியில் ஆசிரியை உள்பட 4 பெண்களிடம் நகை பறிப்பு - கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு

Published On 2019-06-16 12:14 GMT   |   Update On 2019-06-16 12:14 GMT
திருவள்ளூர் பகுதியில் ஆசிரியை உள்பட 4 பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி தீபா(39).

இவர் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தீபா அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி அஸ்வினி(23) திருவள்ளூர் எல்.ஐ.சி. அருகே உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியே வரும்போது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர், அஸ்வினி அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

ஈக்காடு பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரது மனைவி தனலட்சுமி(50). இவர், காற்றுக்காக வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இருவர், தனலட்சுமியின் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த சேஷாசலம் என்பவரது மனைவி கஸ்தூரி (70). இவர் அங்குள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து செல்லும்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர்.

திருவள்ளூர்ரை அடுத்த செவ்வாப்பேட்டை வீரராகவர் நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜெயகரன்.(65). வேப்பம்பட்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். நேற்று இவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

அடுத்தடுத்து நடைபெற்ற நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் உள்ள ஆசிரியையிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியது. அதன்மூலம் கொள்ளையர்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News