செய்திகள்

திமுக எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை: முக ஸ்டாலின்

Published On 2019-06-13 02:29 GMT   |   Update On 2019-06-13 02:29 GMT
மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை :

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி கோவை அவினாசி ரோடு மீனாட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி.க்களின் உருவப் படங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தி.மு.க., நீதிக்கட்சி, மொழிப்பற்று போன்ற அனைத்தையும் கரைத்து குடித்து பல்கலைக்கழகம் போன்று மு.ராமநாதன் திகழ்ந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் நாம் அனைவரும். தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக பல்வேறு நிர்வாகக்குழுவிலும் இடம்பெற்றார்.

க.ரா.சுப்பையன் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, தி.மு.க.வில் இணைந்து சட்ட கல்லூரியில் தமிழ்மன்ற செயலாளராக பணியாற்றி அண்ணாவிடம் அறிமுகமாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றினார்.

இந்தியாவின் பிரதமராக மோடி 2-வது முறையாக பொறுப்பேற்றபின், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர்கள் உணர்ந்து பார்க்க தவறிவிட்டனர்.

மும்மொழி திட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்க ளில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த் தோம். அதனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று சொன்னேன்.

கோவையில் முன்னாள் எம்.பி.க்களின் உருவப்படங்களை திறந்து வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

திருமணமான மூன்றே நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு 17-வது சட்டப்பிரிவை எரித்து கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட் டவர் ராமநாதன். தமிழகத்தின் நலனுக்காக 27 முறை சிறை சென்ற செம்மல் அவர்.

கோவை-பெங்களூரு இடையே இண்டர்சிட்டி ரெயிலை இயக்க காரணமாக அமைந்தார். நேரு விளையாட்டு மைதானம் அமைய காரணமாக இருந்தவர். திருப்பூர், ஈரோடு சுற்றுப்புற சாலை அமைய காரணமாக இருந்தவர். அன்பகம் கட்ட நிதியை வசூலிக்க எனக்கு உதவியவர். இயக்கத்திற்கு வலுசேர்க்க பாடுபட்டவர் ராமநாதன்.

க.ரா.சுப்பையன் எம்.பி.,யாக இருந்த போது அவரது தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தியவர். கிராமப்புறங்களில் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பல சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தார்.

மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடிய வில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் மகத்ததான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் இதை பார்க்க கலைஞரும் இல்லை, அண்ணன் ராமநாதனும், க.ரா.சுப்பையனும் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், மு.கண்ணப்பன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பி, கார்த்திக் எம்.எல்.ஏ., சி.ஆர்.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஆர்.கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News