செய்திகள்

வியாசர்பாடியில் 15 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2019-06-11 06:51 GMT   |   Update On 2019-06-11 06:51 GMT
சென்னை வியாசர்பாடியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீயில் 15 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:

வியாசர்பாடி, அம்பேத்கார் கல்லூரி பின்புறம் உள்ள அன்னை சத்யா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.

நேற்று நள்ளிரவு திடீரென ஒரு குடிசை வீட்டில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மேலும் வேகமாக பரவியது.

தகவல் அறிந்ததும் வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகர், செம்பியம், வண்ணாரப்பேட்டையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

எனினும் 15 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் நாசமாயின.

குடிசையில் தீப்பிடித்ததும் அதில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடுகளை இழந்த பெண்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தீ விபத்து நடந்த இடத்தை தாசில்தார் லலிதா, போலீஸ் உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் பார்வையிட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News