செய்திகள்

உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள்- அரசு அலுவலகங்களில் நாராயணசாமி ஆய்வு

Published On 2019-06-07 07:29 GMT   |   Update On 2019-06-07 07:51 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை வழக்கம்போல சட்டமன்றத்திற்கு வந்தார்.

அங்கிருந்து 9.30 மணியளவில் தலைமை செயலகத்திற்கு சென்றார். தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், அரசு செயலாளர் அபிஜித்விஜய் சவுத்ரி ஆகியோர் முதல்- அமைச்சரை வரவேற்று அழைத்து சென்றனர்.

முதல்கட்டமாக முதல் தளத்தில் உள்ள பணியாளர் சீர்திருத்தத்துறை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

புதுவையில் அலுவல் நேரம் காலை 8.45 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், 9.30 கடந்தும் அங்கு பலர் பணியில் இல்லை. யார் பணியில் இல்லை என்ற விவரத்தை கேட்டறிந்தார். வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார்.

இதன்பின் 2-வது தளத்தில் உள்ள நிதி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கும் பணியில் சிலர் இல்லை.

இதுதொடர்பாக விசாரித்த போது அவர்கள் விடுப்பு எடுத்திருப்பதாக மற்ற ஊழியர்கள் கூறினர். விடுமுறை கடிதத்தை முதல்- அமைச்சர் வாங்கி பார்த்தார். அதில் தேதி மட்டும் வேறு நபர் கையெழுத்தில் இருந்தது.

உடனே தலைமை செயலாளரிடம் சுட்டிக்காட்டி ஏற்கனவே விடுப்பு கடிதத்தை தயாரித்து வைத்துள்ளனர். தயாராக உள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதை விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து 3-வது தளத்தில் உள்ள நிர்வாக சீர்திருத்தத்துறை, உள்துறை, தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலகம், 4-வது மாடியில் நிதி பிரிவு, மின்துறை, நலவழித்துறை, கல்வி செயலகம் ஆகிய அலுவலகங்களுக்கும் முதல்- அமைச்சர் நாராயணசாமி சென்று வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அன்றைய தின வருகை பதிவை முடித்து இனி பணிக்கு வருபவர்கள் கையெழுத்திடாதவாறு பதிவேட்டில் குறிப்பு எழுதினார்.

பின்னர் கீழே முதல்தளத்திற்கு வந்து தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர் தலைமை செயலகத்திற்கு பின்புறம் தரைத்தளத்தில் உள்ள விடுதலை வீரர்கள் நல அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் பண்டக காப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியில் சிறிதுநேரம் அமர்ந்து பயிற்சி விளக்கத்தை கேட்டார். பின்னர் முதல்அமைச்சர் நாராயணசாமி சட்டசபை அலுவலகத்திற்கு திரும்பினார்.

ஆய்வு குறித்து நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



கடந்த ஓராண்டுக்கு முன்பு நானும், அமைச்சர்களும் அரசு துறைகளுக்கு சென்று அதிகாரிகள், ஊழியர்கள் வருகையை ஆய்வு செய்தோம். பொதுப்பணித்துறை, மின்துறை, கூட்டுறவுத்துறை, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் ஆய்வு செய்தோம்.

அப்போது ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது கண்டறியப்பட்டது. கண்காணிப்பாளர்கள், எழுத்தர்கள், அதிகாரிகள் பணிக்கு காலதாமதமாக வருவதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர், செயலர், துறை தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். இதன்பிறகு அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது முறைப்படுத்தப்பட்டது. ஆனால் சில அரசு ஊழியர்கள் பணி நேரத்திற்கு வருவதில்லை. விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். இதுபற்றி குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் இருந்து வந்தது.

ஒரு சில ஊழியர்கள் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாகவும் புகார்கள் வந்தது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிர்வாகத்தை சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்ற முடிவில் தலைமை செயலகத்தில் இருந்து ஆய்வை தொடங்கி உள்ளோம்.

தலைமை செயலகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவுகளில் நானும், தலைமை செயலாளரும் சென்று ஆய்வு செய்தோம். ஒரு சில இடங்களில் எழுத்தர்கள், கண்காணிப்பாளர்கள் இல்லை. அவர்களின் நாற்காலிகள் காலியாக இருந்தது.

இதுதொடர்பாக விசாரித்தபோது அவர்கள் அனுமதி பெற்று வெளியே சென்றுள்ளதாக கூறினர். விடுமுறைக்கு கடிதம் கொடுத்திருப்பதாகவும் சிலர் கடிதம் காட்டினர். சில ஊழியர்கள் சக ஊழியர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு விடுமுறை கடிதம் கொடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வர வேண்டும். தலைமை செயலகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு பொருத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்பு அலுவலகங்கள் அனைத்திலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு பொருத்த உத்தரவிட்டுள்ளேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் இதை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

அரசு ஊழியர்கள் பஞ்சப்படி, வீடு வாடகை படி என பல்வேறு கோரிக்கைகள் வைக்கும்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு சேவை செய்யவே முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் உள்ளனர். கோப்புகள் காலதாமதம் ஆவதால் மக்கள் நலன் பாதிக்கப்படுகிறது.

இதனால்தான் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினோம். தொடர்ந்து அமைச்சர்களும் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள். புதுவை பாரம்பரியமான மக்கள் வாழும் பகுதி. மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர்.

எனவே, அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News