செய்திகள்

கொரட்டூரில் பெண் உயிரோடு எரித்துக்கொலை- கள்ளக்காதலன் கைது

Published On 2019-05-28 09:20 GMT   |   Update On 2019-05-28 09:20 GMT
கொரட்டூரில் பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம்:

ஓட்டேரி, பாயம்மாள் தெருவை சேர்ந்தவர் தேவி (வயது 39). கணவரை இழந்த இவருக்கும் கொரட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் தங்கராஜிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் கொரட்டூர் பகுதியிலேயே தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தேவியின் நடத்தையில் தங்கராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து வந்து தேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதே போல் நேற்று நள்ளிரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தங்கராஜ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தேவி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், மண்எண்ணையை தேவி மீது ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவர் கதறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

முன்னதாக தேவி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனது நடத்தையில் சந்தேகம் அடைந்த தங்கராஜ் மண்எண்ணை ஊற்றி உயிரோடு எரித்தார்” என்று கூறி உள்ளார்.

இதையடுத்து தங்கராஜை போலீசார் கைதுசெய்தனர். அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவி கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News