அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நேரத்தை தீர்மானித்த மோடி- வேட்புமனு தாக்கல் சுவாரஸ்யம்
- சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
- கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பாராளுமன்ற தொகுதியில், போட்டியிட பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பாக, அவர் கங்கை நதியில் உள்ள தஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடி சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.
இதனால் அவர் மிகவும் நல்ல நேரமாக கருதப்படும் 11.40 முதல் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜோதிட சாஸ்திரத்தில் 'அபிஜித் முகூர்த்தம்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றை இணைத்து, பிரதமர் மோடி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்ததாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
பூசம் (புஷ்ய) நட்சத்திரம், மே 13-ந்தேதி அன்று காலை 11.23 மணிக்கு தொடங்கி மே 14-ந்தேதி பிற்பகல் 1.05 மணி வரை நீடித்தது. இந்த நேரத்தில் செய்யப்படும் செயலானது மங்களத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
ஏனெனில், இந்த காலம் அதிர்ஷ்டத்தையும், ஆசீர்வாதங்களையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிறது.
மேலும், கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்த நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என தெரிவித்துள்ளனர்.