முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பெயரில் இயங்கும் மருத்துவக் கல்லூரி பெயரை மாற்றும் அசாம் அரசு
- பர்பேட்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என மாற்றம்.
- இந்தியாவின் 5-வது குடியரசுத் தலைவராக இருந்தார்.
அசாம் மாநிலத்தின் பர்பேட்டா பகுதியில் அரசின் 'பக்ருதீன் அலி அகமது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்தியாவின் 5-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய பக்ருதீன் அலி அகமது (1974-77), அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது நினைவாக 2011 இல் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் கல்லூரியின் பெயரை 'பர்பேட்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை' என மாற்ற அசாம் மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது, அசாம் அரசு தொடங்கியுள்ள 15 மருத்துவக் கல்லூரிகளும் அவை அமைந்துள்ள இடத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆனால், பர்பேட்டா கல்லூரி மட்டும் முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயரில் இருப்பது மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது.
இந்தப் பெயரால் இது ஒரு தனியார் கல்லூரியோ என்ற சந்தேகம் பலருக்கு எழுவதாகவும், அந்தத் தெளிவின்மையைப் போக்கவே இடத்தின் பெயரையே சூட்ட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.