செய்திகள்

மணல் கடத்திய டிராக்டர் மோதி தந்தை, மகன் பலி - டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியல்

Published On 2019-05-18 11:09 GMT   |   Update On 2019-05-18 11:09 GMT
அரக்கோணம் அருகே மணல் கடத்திய டிராக்டர் மோதி தந்தை மகன் பலியானதையடுத்து டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள பள்ளூர் காலனியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35) கூலி தொழிலாளி. இவருக்கு ஆகாஷ் (7), தினேஷ் (5). 2 மகன்கள் உள்ளனர். 3 பேரும் நேற்று இரவு பள்ளூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஜினி மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். ஆகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

தகவலறிந்த ரஜினியின் உறவினர்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.விஜயகுமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது இதன் காரணமாக பல உயிர்சேதம் ஏற்படுகிறது.

எனவே மணல் கடத்தலை தடுத்து ரஜி சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ராஜேஷ் (30) மற்றும் டிரைவர் சதீஷ் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News