செய்திகள்
கொலை செய்யப்பட்ட தாஜூதீன்

பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலையால் பீதி

Published On 2019-05-18 05:47 GMT   |   Update On 2019-05-18 05:47 GMT
பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:

பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவியின் மகன்கள் தாஜூதீன் (வயது45), கமருதீன் (40), ஜாகீர்உசேன் (38). தாஜூதீன் ஆயக்குடியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

மற்ற 2 பேரும் வேலைக்கு செல்லாமல் பூர்வீக சொத்தை அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் மகன் ஜாபர் அலி. இவர் கமருதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்தை பிரித்து தரக்கோரி சமரசம் பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் நேற்று இரவு உன்னால்தான் இந்த பிரச்சினை என்று தாஜூதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாஜூதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜாகீர்உசேன், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

பழனி அடிவாரம் அருகே உள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் அமரப்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. விவேகானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கொலைகள் நடந்துள்ளது பழனி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News