செய்திகள்

தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்படும் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-04-30 08:23 GMT   |   Update On 2019-04-30 08:47 GMT
தண்ணீர் பஞ்சத்தைப்போல் தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். #KSAlagiri #Congress
சென்னை:

ஆசிய தடகள போட்டிகளில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.



சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லது பா.ஜனதாவுக்கு எதிரான அணியே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது மேற்கு வங்காளத்தில் 40 எம்எல்ஏக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று கூறுவது குதிரை பேரம் போல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு புறம்பான செயலாகும்.

பிரதமர் மோடி ஒரு பொதுக்கூட்டத்திற்கு 10 கோடி ரூபாய் செலவு செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் வாகனத்திற்கு பின்னால் 2000 வாகனங்கள் செல்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போது 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதை எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழும்புகிறது.

வாக்கு எண்ணிக்கை கணக்கிடுவது தள்ளி போவதால், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.

அ.தி.மு.க. அரசு மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவிற்கு திறக்கவில்லை. 25 லட்சம் டன் கொள்முதல் செய்வது வழக்கம் ஆனால் 15 லட்சம் டன் நெல் கொள்முதல் மட்டுமே செய்து இருக்கிறது.

கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படி வருமோ அதே போல அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், செயல் தலைவர்கள் வசந்தகுமார், ஜெயகுமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், கே.ஆர்.ராமசாமி, மாவட்ட தலைவர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், சிவ. ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், ரங்கபாஷ்யம், நவீன், சிரஞ்சிவி, ராகுல், மைதிலி தேவி, பாலமுருகன், பிரின்ஸ், தேவசகாயம், உ.பலராமன், நாச்சிக்குளம் சரவணன், அரும்பாக்கம் வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். #KSAlagiri #Congress

Tags:    

Similar News