செய்திகள்

கோவையில் பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை

Published On 2019-04-28 06:09 GMT   |   Update On 2019-04-28 06:09 GMT
கோவையில் பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #jewelryrobbery

கோவை:

கோவை ராமநாதபுரம் சந்திப்பு அருகே வணிக வளாகத்தின் முதல் மாடியில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு போத்தனூரை சேர்ந்த ரேணுகா(28), செல்வபுரத்தை சேர்ந்த திவ்யா(23) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மாலை 4 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்தார். இதைப் பார்த்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்? என்று விசாரித்தனர்.

அதற்கு பதிலளிக்காத வாலிபர் திடீரென்று ரேணுகா, திவ்யா ஆகியோரை சரமாரியாக அடித்து தாக்கினார். இதில் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். உடனே அந்த வாலிபர் நிறுவனத்துக்குள் இருந்த லாக்கர்களை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்தார்.

நிறுவன மேஜைகளில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

வெகுநேரம் கழித்து ரேணுகா, திவ்யா ஆகியோருக்கு மயக்கம் தெளிந்தது. அவர்கள் கண் விழித்து பார்த்த போது நிறுவனத்தின் லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து சென்றனர்.

மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நிதிநிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி ஒரு வாலிபர் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதேபோல வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள கடைகளின் முன்புறமும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் கொள்ளையடித்த வாலிபர் உள்ளே செல்லும் காட்சிகள் தெளிவாக தெரிந்தது.

நிதிநிறுவன அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் விவரங்களை சேகரித்தனர். லாக்கர்களில் இருந்து மொத்தம் ரூ.2 கோடி மதிப்புடைய 812 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தனி ஆளாக ஒரே ஒரு வாலிபர் துணிச்சலாக இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கலாம் அல்லது நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் துணையாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #jewelryrobbery

Tags:    

Similar News