செய்திகள்

கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம் - மர்ம கடிதத்தில் மிரட்டல்

Published On 2019-03-26 10:13 GMT   |   Update On 2019-03-26 10:13 GMT
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat

ஆலந்தூர்:

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தில் அனுப்பியவரின் பெயர் இல்லை. அதில் கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம். உங்களை சுற்றிவரும் தமிழக அமைச்சர்களை சுட்டுக் கொல்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதத்தை பிரித்து பார்த்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங் சாய் இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தர விட்டார்.


இதனைதொடர்ந்து கிண்டி போலீசார் மிரட்டல் கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடிதத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட எதுவும் இடம் பெறாததால் அதனை எழுதியது யார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதுபற்றி கடிதத்தில் உள்ள முத்திரையை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி கமி‌ஷனர் சுப்ராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிடிக்காத நபர்தான் இந்த கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழு பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மிரட்டல் காரணமாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat

Tags:    

Similar News