செய்திகள்
கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 36 பேரிடம் ரூ.1 கோடி மோசடி - வாலிபர் கைது

Published On 2019-03-22 10:22 GMT   |   Update On 2019-03-22 10:22 GMT
நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 36 பேரிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட மேலப்பாளையத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து சில கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பல லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களிடம் முன்பணமாக லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள்.

அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் இதுபோன்ற கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள். இதற்காக அந்த கும்பல் தனியாக ஏஜென்ஸி அமைத்து கைவரிசை காட்டி வருகிறது.

மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக அறிவித்தது. இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் அந்த நிறுவனத்தை அணுகினர். அந்த நிறுவனத்தினர் முன் பணமாக ஆயிரக்கணக்கில் வசூலித்தார்கள். அந்த வகையில் ரூ.1 கோடி வரை அந்த நிறுவனம் வசூல் செய்துள்ளது.

ஆனால் சொன்னபடி யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. யாருக்கும் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 36 பேர் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



Tags:    

Similar News