செய்திகள்

வடபழனி பகுதியில் நகை திருடும் கும்பலைசேர்ந்த 2 பெண்கள் கைது

Published On 2019-03-17 07:18 GMT   |   Update On 2019-03-17 07:18 GMT
வடபழனி பகுதியில் நகை திருடும் கும்பலைசேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மாங்காடு மேல்மாநகர் அம்மன்முருகன் நகரைச் சேர்ந்தவர் ருக்குமணி (75).

கடந்த டிசம்பர் மாதம் இவர் கோயம்பேட்டில் இருந்து வடபழனிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது ருக்குமணி அணிந்திருந்த 5 சவரன் செயினை உடன் வந்த பெண்கள் திருடி சென்றது தெரிந்தது.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் புலியூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜீனத் (53). அவர் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். பஸ் வடபழனி கோவில் அருகே வந்தபோது தான் அணிந்திருந்த 6 சவரன் செயின் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார் உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தங்க சங்கிலியை திருடிய பெண்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து முத்தம்மாள் (29), முத்துமாரி (37) ஆகிய பெண்களை தனிப்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதில் தொடர்புடைய மீனாட்சி மற்றும் கூட்டாளிகளான மூன்று பெண்களை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் மதுரை கடச்சநேந்தல் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த கும்பல் தனியாக பஸ்சில் வரும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து அவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் மீது விருகம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வேலூர், மதுரை ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. பெண் கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலிசாரை கமி‌ஷனர் விஸ்வநாதன் பாராட்டினார்.

Tags:    

Similar News