செய்திகள்

மரக்காணம் அருகே கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

Published On 2019-02-09 12:20 GMT   |   Update On 2019-02-09 12:20 GMT
மரக்காணம் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 38). மீனவர்.

அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், சுப்பிரமணி, மண்ணாங்கட்டி ஆகியோர் ஒரு பைபர் படகில் கடந்த 6-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துவிட்டு மறுநாள் காலை அவர்கள் கரைதிரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் அதிகம் காணப்பட்டது. இதில் படகில் இருந்து மண்ணாங்கட்டி தடுமாறி கடலில் விழுந்தார்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மண்ணாங் கட்டியை மீட்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து மதிவாணன், சுப்பிரமணியன் ஆகியோரை கரை திரும்பினர். பின்பு அவர்கள் மரக்காணம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் கடல் அலையில் மண்ணாங்கட்டி சிக்கிவிட்டார். அவரை மீட்கவேண்டும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மீனவர்கள் மண்ணாங்கட்டியை தேடி சென்றனர். அப்போது கோமுட்டி சாவடி கடற்கரையில் மண்ணாங்கட்டி பிணமாக கிடந்தார். பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடல் அலையில் சிக்கி இறந்த மீனவர் மண்ணாங்கட்டிக்கு சரவணன் என்ற மகனும், லாவன்யா, நிவேதா ஆகிய மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News