செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-02-01 17:17 GMT   |   Update On 2019-02-01 17:17 GMT
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் சித்தேரிக்கரை, அகரம்பாட்டை, ராகவேந்திராநகர், செந்தில்நகர், கிருஷ்ணாநகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள செந்தில் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இதனை கண்டித்தும், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்து அதற்கான ஏற்பாடு செய்து வருகின்றனர். இப்பகுதி பிரதான போக்குவரத்து சாலையாகவும், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் செல்லும் சாலையாகவும் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மது குடிக்க வருபவர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News