செய்திகள்

ரூ. 15 லட்சத்தை திருப்பி கேட்டவர் மண்டை உடைப்பு - 2 பேர் கைது

Published On 2019-01-22 14:46 GMT   |   Update On 2019-01-22 14:46 GMT
பணம் விவகாரம் மற்றும் மண்டை உடைப்பு வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:

சிவகங்கை மாவட்டம் டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகளுக்கு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலம் பாரப்பட்டி அருகே உள்ள பூஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சோலைக்குமார் என்கிற குட்டி என்பவர் ரூ.15 லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் தனபால் செல்போனில் தொடர்பு கொண்டு சோலைக்குமாரிடம் பணத்தை கேட்டபோது, பாரப்பட்டியில் உள்ள எனது வீட்டிற்கு வாருங்கள். பணத்தை திரும்ப தருகிறேன் என்று கூறினார்.

இதனை நம்பிய தனபால் தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்கள் குருநாதன், பிரியா ஆகியோருடன் நேற்று முன்தினம் சேலம் வந்தார்.

பின்னர் அவர்கள் பாரப்பட்டி அருகே உள்ள பூஞ்சக்காடு பகுதியில் இருக்கும் சோலைக்குமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் அவரது மனைவி மலர்விழி இருந்தார். அவரிடம் தனபால், உங்கள் கணவர் பணம் தருவதாக கூறி எங்களை இங்கே வரச் சொன்னார். அவர் வீட்டில் இருக்கிறாரா? என கேட்டார். அதற்கு மலர்விழி, எனது கணவர் சோலைக்குமார் வீட்டில் இல்லை. வெளியே சென்று விட்டதாக கூறினார்.

அப்போது, தனபால் நாங்கள் கொடுத்த பணத்தை உடனடியாக உங்களது கணவரிடம் இருந்து திருப்பி வாங்கி கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மலர்விழி மற்றும் அவரது மகன் ஹரிகரன் ஆகியோர் குருநாதனை கொடுவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. குருநாதன் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அ.தி.மு.க. பிரமுகர் சோலைக்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பூஞ்சக்காடு பகுதியில் சோலைக்குமாரின் சகோதரர்கள் பாரப்பட்டி குமார், உமா சங்கர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.

இன்று காலை இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பூஞ்சக்காடு பகுதிக்கு சென்று பாரப்பட்டி குமார், உமாசங்கர் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள், இதில் பாரப்பட்டி குமார் தி.மு.க. விவசாய அணி அமைப்பாளராக உள்ளார் என்பதும், உமா சங்கர் பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

2 பேரையும் போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் தலைமறைமாக உள்ள மலர்விழி, ஹரிகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

பணம் விவகாரம் மற்றும் மண்டை உடைப்பு வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News