செய்திகள்

கவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபர்

Published On 2018-12-14 11:09 GMT   |   Update On 2018-12-14 11:09 GMT
கவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 79). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர். நேற்று இவரது வீட்டிற்கு ஒருவர் வந்தார். தான் கோவை மாநகராட்சி அதிகாரி என்றும் உங்கள் வீட்டு தண்ணீர் பில் மற்றும் வரி வசூலுக்காக கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

அப்போது வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியும் இருந்தனர். தண்ணீர் பில் புத்தகம் மற்றும் வரி புத்தகத்தை பீரோவில் இருந்து எடுத்து கொடுத்தனர். அதனை வாங்கிப்பார்த்த நபர் மாடியை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

மாடியில் எங்களால் ஏற முடியாது. நீங்கள் சென்று பார்வையிடுங்கள் என்று வெங்கடேசன் கூறினார். அவர் மாடியில் ஏறி அங்குமிங்கும் நடந்து அளவீடு செய்தார். இறங்கி வந்த பின்னர் முதியவர்களிடம் இருந்து வாங்கிய ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறிச்சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் பீரோவை பார்த்தபோது அவசரத்தில் பீரோவை பூட்ட மறந்து விட்டது தெரியவந்தது. அதனை சோதனை செய்தபோது 2 பவுன் நகை திருட்டுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாநகராட்சி அதிகாரிகள் போல் வந்த நபர் கொள்ளையன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி அதிகாரிபோல் நடித்து கொள்ளையடித்த நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News